சென்னை:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக அதிகம் வெப்பம் நிலவி வரும் வேளையில், நாளை முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக தமிழ்நாட்டில் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை:அதிகபட்ச வெப்பநிலை தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 3 டிகிரி முதல் 4.6 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மற்றும் தருமபுரி மாவட்டங்களில் வெப்ப அலை வீசியது.
தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் பத்து இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலை ஈரோட்டில் 42 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் மற்றும் சேலத்தில் 41.6 டிகிரி செல்சியஸ், வேலூரில் 41.3 டிகிரி செல்சியஸ், நாமக்கல்லில் 41.0 டிகிரி செல்சியஸ், தருமபுரி மற்றும் திருச்சியில் 40.7 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 40.4 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூர் மற்றும் கரூர் பரமத்தியில் 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மதுரை விமான நிலையம், சென்னை மீனம்பாக்கம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் 39 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் 34 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ், புதுவையில் 35.6 டிகிரி செல்சியஸ், காரைக்கால் பகுதியில் 34.6 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப்பகுதிகளில் 23 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 39.0 டிகிரி செல்சியஸ் (இயல்பை விட 3.9 டிகிரி செல்சியஸ் மிக அதிகம்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 37.0 டிகிரி செல்சியஸ் (இயல்பை விட 2.7 டிகிரி செல்சியஸ் அதிகம்) பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்று முதல் நாளை (ஏப்.9) வரை தென்தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்ரல் 10ம் தேதி, தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 11ம் தேதி, தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.