புதுடெல்லி:இந்தியாவின் புதுமை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நமது தேசம் முழுமைக்கும் எண்ணற்ற மைல்கற்களுடன் தமிழ்நாட்டின் பங்களிப்பும் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் தொல்லியல் துறை சார்பில் 'இரும்பின் தொன்மை' நூலினை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"தமிழர் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது. இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே நான் அறிவிக்கிறேன். மீண்டும் சொல்கிறேன். தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் மானுடவியல் ஆய்வுப் பிரகடனத்தை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக - இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல உலகுக்கே நான் அறிவிக்கிறேன். 5,300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.
தற்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் மூலம் அண்மையில் கிடைக்கப் பெற்ற காலக்கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு. 4000 ஆண்டின் முதற்பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளது. தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பு அறிமுகமாயிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறலாம்",என்று அவர் தெரிவித்தார்.