சென்னை:கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியபட்டனரா எனவும், கள்ளக்குறிச்சி சம்பவத்தை ஏற்றுகொள்ள முடியாது என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு (ஜுன் 26) தேசிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு விழிப்புணர்வு போஸ்டரை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ''நாளை சர்வதேச போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான நாளாக கொண்டாப்படுகிறது. நாளைய தினம் மற்ற நாட்களைபோல சாதாரண நாள் அல்ல. போதைப்பொருட்களால் பலர் உயிரை இழக்கின்றார்கள். மற்ற ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்தாண்டு போதையினால் இருண்ட நிகழ்வு கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் 60க்கும் மேற்பட்டவர்கள், மது மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்தி இறந்துள்ளனர். இது மிகவும் சோகமான நிகழ்வாகும். போதை கலாச்சாரம் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தி தற்கொலை செய்யவும், குற்றச்செயல்களுக்கும் தூண்டுகிறது. போதைப்பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். இளைஞர்கள் அடிமையாவதன் மூலம் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. போதை பழக்கத்தால் கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது.
போதைப்பொருட்களினால் நம் நாடு பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. இவற்றால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை நம் நாடு பார்த்துள்ளது. பஞ்சாப் மாநிலம் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. 1980கள் வரை பஞ்சாப் மாநிலம் வேளாண் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேறி இருந்தது. ஆனால், அடுத்த 20 ஆண்டுகளில் போதைப் பொருள் அம்மாநிலத்தை என்ன செய்துள்ளது என பார்த்துள்ளோம்.
நான் தமிழ்நாடு மாநிலத்திற்கு வந்த நாள் முதல் எண்ணற்ற பெற்றோர்கள் வந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள போதைப்பொருளை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது வரை இதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. இங்கு போதைப்பொருள் இல்லை என கூறி வருகிறோம்.