திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் அருகே உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டத்தின் குத்தகை காலம் முடிவடைய உள்ள நிலையில், அதனை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் நெல்லை வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அங்குள்ள தொழிலாளர்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த வெளியேற்றத்தால் பல தலைமுறையாக அப்பகுதியில் வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்திட வேண்டும் என முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் இன்று (மே.27) நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை, காக்காச்சி ஊத்து, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை எஸ்டேட்கள் அமைந்துள்ளது. இங்கு 2000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர்.
சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த இந்த இடம் 1929 ஆம் ஆண்டு தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. இதனால் காலங்கள் கடந்து பல அரசு நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டாலும், அடர்ந்த வனப் பகுதியான மாஞ்சோலையை வனத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாமல் இருந்தது.
இதையும் படிங்க: அடிக்கடி சேதமாகும் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலம்.. புதிய கான்கிரீட் தளம் அமைக்க கோரிக்கை! - Sinkhole In The Vallanadu Bridge
இது போன்ற நிலையில் தான் சிங்கம்பட்டி ஜமீன்தார் வழங்கிய குத்தகை காலம் வரும் 2028 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. எனவே நெல்லை வனத்துறை அதிகாரிகள் மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி ஊத்து ஆகிய பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தற்போது முதலே மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 90 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு பல தலைமுறையாக வசித்து வரும் மக்கள், கவலையில் மூழ்கியுள்ளனர், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் மாஞ்சோலை தேயிலைத் தொட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசே தேயிலைத் தோட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது போன்ற நிலையில் முன்னாள் தமிழ்நாடு சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஆவுடையப்பன் இன்று நெல்லை ஆட்சியர் கார்த்திகேயனை நேரில் சந்தித்து, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தை போன்று நெல்லையிலும் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மனு அளித்தார்.
இது குறித்து ஆவுடையப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாஞ்சோலையில் ஐந்து தலைமுறையாக தொழிலாளர்கள் வசிக்கின்றனர். அங்கே கல்விக்கூடங்கள், ரேஷன் கடைகள், தபால் நிலையங்கள் உள்ளன. அவர்களுக்கு கீழே சொந்தமாக இடம் எதுவும் கிடையாது, வேறு வேலையும் பார்க்க தெரியாது.
எனவே தொழிலாளர்களை வெளியேற்றாமல் தமிழக அரசே மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்திட வேண்டும் என ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம், முதல்வர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்”, என கூறினார்.
இதையும் படிங்க: திருவாரூர் அரசு மருத்துவமனை முன் தேங்கும் கழிவுநீர்.. குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம்! - Thiruvarur Govt Hospital