சென்னை: தலைநகர் சென்னையின் சைதாப்பேட்டை, அசோக் நகர் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் 'தன்னை அறிதல்' என்ற தலைப்பில் ஆகஸ்ட் 28ஆம் தேதி சொற்பொழிவு நடத்தப்பட்டது. இதனைத் தனியார் தொண்டு நிறுவத்தைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர் தலைமை தாங்கி மாணவர்களிடத்தில் உரையாற்றினார். இதில் 'தன்னை உணர்ந்த தருணங்கள்' என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.
அப்போது, நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது என்றும், உங்களுக்கு யோக தீட்சை தருகிறேன் எனவும் மாணவிகள் மத்தியில் பேசியுள்ளார். தொடர்ந்து மாணவிகள் அனைவரையும் கண்ணை மூட வைத்து பாடலை ஒலிக்க விட்டு அவர்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான பேச்சைத் தொடர்ந்துள்ளார் விஷ்ணு. அவரது பேச்சில் பல மாணவிகள் உணர்ச்சி வசப்பட்டு அழுதனர்.
இதற்கு அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் பள்ளியில் வந்து மறு பிறவி, பாவ புண்ணியம் பற்றி பேசுகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பி தனது கண்டனக் குரலைப் பதிவு செய்தார். இதனால் அந்த ஆசிரியருக்கும், விஷ்ணுவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின் நடுவே தொடர்ந்து மைக்கில் பேசிய விஷ்ணு ஆசிரியரின் கருத்துக்களுக்கு எதிர்க்கருத்தை மைக்கிலேயே பேசி மாணவர்களையும் தனக்கு ஆமோதிக்கும் விதமாக கருத்துக்களை கேட்டார்.
இந்த காணொளியை விஷ்ணு தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில், இதனை பார்த்த பல கல்வியாளர்களும், கட்சி நிர்வாகிகளும் தங்களின் கண்டனங்களை பதிவுசெய்தனர். எதிர்கட்சிகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
எஸ்எப்ஐ போராட்டம்:இந்நிலையில் இந்திய மாணவர் சங்கம்(எஸ்.எப்.ஐ) மாணவர்கள், அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்த அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைத்தளங்களிலும் மக்கள் இதற்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் சென்னை மாவட்ட அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் தமிழரசி என்பவருக்கு காலியாக உள்ள திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நிர்வாக மாறுதல் வழங்கி ஆணையிடப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தந்த விளக்கம்:இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு இன்று நேரில் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அதில், அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களை தங்களது பிள்ளைகள் போல் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், பள்ளி நிகழ்ச்சிகளில் யாரை அழைத்து சிறப்பு நிகழ்ச்சி நடத்துவது என்பதில் ஆசிரியர்களுக்கு புரிதல் இருக்க வேண்டும் என்றும் பேசிய அவர், பிற்போக்குத் தனமான நிகழ்ச்சியை நடத்திய விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியின் போது அறிவியல் முரண்பாடான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான தமிழ் ஆசிரியர் சங்கருக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். முன்னதாக இந்த விவகாரத்தில், கல்விக்கு சம்மந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் இனி அரசு அனுமதி இன்றி பள்ளிகளில் நடத்தக்கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சோ.மதுமதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் புகார் அளித்தால் விஷ்ணு மீது காவல்துறை நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் எனவும் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறினார்.
புதிய வழிகாட்டு நெறிமுறைகள்:இதுத் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை - தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன். தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் - அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன். அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்வதென்ன?:இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 28ஆவது பிரிவு கல்வி நிறுவனங்களில் மத பிரசாரம் தொடர்பான வரையறைகளை வழங்குகிறது. அதில் முழுக்க முழுக்க அரசு நிதியால் பராமரிக்கப்படும் எந்த கல்வி நிறுவனத்திலும் மத போதனைகளை வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பொதுக் கல்வி நிறுவனங்கள் மதச்சார்பற்றதாக இருப்பதையும், மத போதனைகளை வழங்காமல் இருப்பதையும் இந்த சட்டம் உறுதி செய்கிறது.
இச்சட்டத்தின் பிரிவில் அரசு நிதியால் முழுமையாக பராமரிக்கப்படாத தனியார் அல்லது அரசு உதவி பெறும் மதநிறுவனம் சார்ந்த கல்வி நிறுவனங்களில், மத போதனை அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், இதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஒப்புதல் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் மத போதனைகளைப் பெறலாமா வேண்டாமா என்பதைத் தேர்வுசெய்ய உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசால் நிதியளிக்கப்படும் கல்வி நிறுவனங்களின் மதச்சார்பற்ற தன்மையைப் பேணுவதும், தனிநபர்கள் தங்கள் சொந்த மத நம்பிக்கைகளைத் தொடரவோ அல்லது மத நடவடிக்கைகளில் பங்கேற்காததைத் தேர்வுசெய்யும் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதும் பிரிவு 28-இன் நோக்கமாகும்.
அதேபோல, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 51ஏ 8ஆவது பகுதியில், அறிவியல் மனப்பான்மையை வளர்த்து, மனித நேயத்தை நிலைநிறுத்தி, சீர்திருத்த உணர்வை வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை (Scientific Temper) என வலியுறுத்தப்படுகிறது. அதாவது தனிநபர்கள் தங்கள் பிரச்சினைகளை அறிவியல் சார்ந்த பகுத்தறிவுடன் அணுக வேண்டும், மனிதகுலத்தின் மீதான இரக்கம் மற்றும் மரியாதையை ஊக்குவிக்க வேண்டும், அதேநேரம் சமூக மேம்பாட்டிற்கான அமைப்புகளை கேள்விக்குள்ளாக்கி உண்மையை கண்டறிவதில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இது 1976ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 42ஆவது திருத்தத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டது. இதன் வாயிலாக அரசியலமைப்பில் அறிவியல் மனநிலையை வெளிப்படையாக உள்ளடக்கிய முதல் மற்றும் ஒரே நாடாக இந்தியா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"என் எல்லைக்கு வந்து அவமானம்; சும்மா விடமாட்டேன்" - மகாவிஷ்ணு விவகாரத்தில் அமைச்சர் அதிரடி
இதையும் படிங்க:பள்ளி நிகழ்ச்சிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு