தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கான திட்டங்கள்.. பட்டியலிட்டு வெளியிட்ட அரசு!

Tamil Nadu Government: மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் நலத் திட்டத்தினை நினைவுகூறும் விதமாக தமிழக அரசு செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

women scheme
women scheme

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 10:31 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டில் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த பெண்கள் நலத்திட்டம் குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “மங்கயராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்று கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை மகளிர் சமுதாயத்தின் முக்கியத்துவத்தினை மிக அழகான கவிதை வரிகளில் பாடியுள்ளார்.

இத்தகைய பெருமைக்குரிய மகளிர் சமுதாயம் வீட்டிற்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த கொடுமையை எதிர்த்து பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் போராடியதன் விளைவாக பெண்கள் சமுதாயம் இன்று எழுச்சிப் பெறத் தொடங்கியுள்ளது.

கருணாநிதி தமிழ்நாடு முதலமைச்சராக வீற்றிருந்த காலத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கான கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு, சொத்துரிமை, உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு, மகளிர் திட்டம் - மகளிர் சுய உதவிக்குழுக்கள் முதலான பல திட்டங்களை நிறைவேற்றினார். இத்திட்டங்களால் பெண்கள் வாழ்வில் உயர்ந்து பொருளாதார விடுதலை பெற்றுள்ளனர்.

உலகெங்கும் உழைக்கும் மகளிர் போராடி உரிமை பெற்ற நன்னாள் என மார்ச் 8ஆம் நாள் மகளிர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சமுதாய முன்னேற்றத்திற்காக ஆற்றியுள்ள திட்டங்களை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாகும்.

பெண்களை அர்ச்சகர்களாக்கி, ஓதுவார்களாக்கி சாதனை:முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பால் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதைக் கூறி ஆண், பெண் என்ற வேறுபாட்டை நீக்கி 3 பெண்களை அர்ச்சகர்களாக நியமித்து, 5 பெண்களை ஒதுவார்களாகப் பணியில் அமர்த்தி அதிரடி சாதனை படைத்துள்ளார்.

பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்து திட்டம்:சமூகத்தில் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதில் திமுக அரசு முனைப்புடன் செயல்படும் என்றும், ஆண்களுக்கு நிகரான சமநிலையைப் பெண்கள் விரைவில் அடைவார்கள் என்றும் எப்போதும் சொல்லிவரும் முதலமைச்சர் 2021 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணம் உள்பட முக்கியத் திட்டங்களில் கையெழுத்திட்டு மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

குறிப்பிட்ட தூரம் அல்லது நகரங்களுக்குள் இயக்கப்படும் சாதாரண கட்டணப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் இந்தத் திட்டம் மக்களிடையே அதிகம் பேசப்படும் திட்டமாக உள்ளது. இதனால் பெரிதும் பயனடைந்துள்ளதாக வேலைக்குச் செல்லும் மகளிர் பலரும் தெரிவித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 லட்சம் பெண்கள் கட்டணமில்லாப் பேருந்து பயணம் விடியல் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

புதுமைப் பெண் திட்டம்:அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று பின்னர் உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் வகையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி "புதுமைப் பெண் திட்டம்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5.09.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற மாணவிகள் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். தனியார் பள்ளிகளில், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்று பின் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

எதிர்காலத் தலைமுறையின் வளர்ச்சிக்கான முதலீடாக "புதுமைப் பெண்" திட்டத்தினைப் பார்ப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், இத்திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் மாதந்தோறும் 2.73 லட்சம் மாணவிகள் பயனடைகின்றனர். மேலும் இந்த முயற்சியின் விளைவாக நடப்புக் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்:வீட்டில் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உழைக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிவைக்கப்பட்டு பெண்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

இத்திட்டம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் வெளியிடப்பட்ட 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி, நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியும் மகளிர் எனப் பல்வேறு வகைகளில் தங்களது விலை மதிப்பில்லா உழைப்பை வழங்கி வரும் பெண்களும் இத்திட்டத்தால் பயன்பெறுகின்றனர்.

தமிழ்நாட்டுப் பெண்களிடையே இத்திட்டத்திற்குக் கிடைத்துள்ள ஆதரவைப் பார்த்து, வேறு பெயர்களில் தங்கள் மாநிலங்களிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பிற மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் இத்தகைய சிறப்பான திட்டங்களால் மகளிர் சமுதாயம் அடைந்து வரும் முன்னேற்றம், தன்னம்பிக்கை உணர்வு, சமத்துவச் சிந்தனை இவையெல்லாம் பெண்களின் பெருமை பேசும் ஆவணங்களாகத் திகழ்கின்றன" என இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'வாத்தி கம்மிங் ஒத்து' சென்னை வந்த தோனி.. வைரலாகும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details