சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களின் அருகில் உள்ள பகுதிகளுடன் இணைப்பதற்கும், ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தவும் தமிழ்நாடு அரசு ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு திட்ட அறிக்கையின் படி, மாநிலம் முழுவதும் மினி பேருந்துகளை இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட உள்ளது.
சென்னையை பொறுத்தவரை தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் ஆகிய பகுதிகளுக்கு மினி சேவை வழித்தடம் வழங்கப்பட மாட்டாது. அதேநேரத்தில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்பட உள்ளது.
மேலும் மாநிலம் முழுவதும் எந்தெந்த வழித்தடங்களில் மினி பேருந்து சேவைகளுக்கு அனுமதி வழங்குவது மற்றும் எவ்வளவு பேருந்துகளுக்கு அனுமதி வழங்குவது என்பதை, அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள்(RTO) முடிவு செய்து, அதற்கான அனுமதியை வழங்குவார்கள் என்று அரசு அறிவித்திருக்கிறது.