சென்னை :தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 909 விவசாயிகளுக்கு 201 கோடியே 67 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நிவாரணத் தொகையினை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் சராசரி ஆண்டு மழையளவை விட கூடுதலாக ஒரே நாளில் அதிகளவு மழைப்பொழிவு ஏற்பட்டது.
அதிகன மழையினை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும், பொது மற்றும் தனியார் கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான பகுதிகளை 21.12.2023 அன்று பார்வையிட்டு மிகக் கடுமையான வெள்ள பாதிப்பிற்குள்ளான பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, மழை வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான பயிர்களுக்கான நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் தொகுப்புகளை அறிவித்தார்.