சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி கடந்த 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவருக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தின் அருகே ரூ.39 கோடி செலவில் 'கலைஞர் நினைவிடம்' அமைக்கப்பட்டது. நூலகம், மினி திரையரங்கம் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த நினைவிடத்தை இன்று மாலை 7 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
கருணாநிதி சிலை: அண்ணா நினைவிடத்தின் அருகே கருணாநிதி அமர்ந்த நிலையில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கருணாநிதி சதுக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற்றதற்காக பாராட்டி எழுதிய 'தமிழ் செம்மொழி' என்ற கடிதம் தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி சமாதியின் பின்புறம் அவரது உருவம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. உதயசூரியன் வடிவமைப்பில் உள்ள இந்த உருவம் பகலில் வெள்ளை நிறத்திலும், இரவு நேரத்தில் லேசர் ஒளியில் ஜொலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் உலகம்: கருணாநிதி சமாதிக்கு பின்னால் 'கலைஞர் உலகம்' என்ற டிஜிட்டல் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளே 'கலைஞரின் எழிலோவியங்கள்' என்ற பெயரில் கருணாநிதியின் இளமைக் காலம் முதல் அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகள், போராட்டங்கள், அவர் நிறைவேற்றிய திட்டங்கள் ஆகியவை புகைப்படத் தொகுப்பாக இடம்பெற்றுள்ளது. அருங்காட்சியகத்தின் வெளிப்புறத்தில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திருவள்ளுவர் சிலை, அண்ணா மேம்பாலம் உள்ளிட்ட திட்டங்கள் புகைப்படமாக அமைக்கப்பட்டுள்ளன.
'கலைஞருடன் செல்பி எடுக்கலாம்': இதனை தொடர்ந்து 'கலைஞருடன் ஒரு செல்பி' என்ற அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் அமர்ந்திருக்கும் தோற்றத்தில் இருக்கிறார், அங்கு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அந்த புகைப்படம் உடனே வேண்டுமென்றால் வாட்ஸப் மூலம் நமது செல்போனில் பெறும் வகையில் வசதி அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் 'கலைஞரின் சிந்தனை' என்ற அறையில் ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட 8 புத்தகங்களுடன் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது. அதில் எந்த புத்தகத்தை தொட்டாலும் அது பற்றிய விளக்கம் வீடியோவாக தோன்றுகிறது.