கோயம்புத்தூர்:கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று (மே 25) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நதிநீர் உரிமைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள், விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த இக்குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், “தமிழ்நாட்டில் காவிரி, பாலாறு, தென்பெண்ணை, சிறுவாணி, அமராவதி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் ஒவ்வொன்றாக பறிபோய் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு இதனைத் தட்டி கேட்பதற்கு தயங்குகிறது. சிறுவாணி ஆற்றிற்கு நடுவே இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய அணையை கேரள மாநிலம் கட்டியுள்ளது.
2015ஆம் ஆண்டு கேரள மாநிலம் அணையை கட்டிக் கொள்வதற்கு கர்நாடக மாநிலம் அனுமதி அளித்தபோது, அன்றைய தினம் அதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர், பின் அந்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற்றது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் கேரள மாநிலம் அங்கு 2 அணைகளை கட்டி, சிறுவாணியின் குறுக்கே தண்ணீர் வருவதை தடுத்து நிறுத்தி உள்ளது.
அதேபோல், அமராவதி நதியின் குறுக்கே சிலந்தி ஆற்றில் சட்டவிரோதமாக கேரள அரசு அணை கட்டியிருக்கிறது. எந்த அரசாங்கமும் தன் விருப்பத்திற்கு அணை கட்ட முடியாது. கீழ் பாசன விவசாயிகள் கருத்துக்களை கேட்காமல் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது, காவிரி மேலாண்மை திட்டத்தில் அனுமதி இல்லாமல் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. நாம் பெறுகிற இடத்தில் இருக்கின்ற பொழுது, காவிரி மேலாண்மை ஆணையத்தைச் செயல்படுத்த வேண்டிய அதிகாரம் தமிழக அரசிடம் உள்ளது.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சட்ட விரோதமாக பிப்ரவரி 1ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசின் ஒப்புதலோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் கூறுகிறார். இதுவரை தமிழக முதலமைச்சர் வாய் திறக்கவில்லை.
அதேபோல், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசிற்கு கேரள அரசு விண்ணப்பம் அளித்துள்ளது. மே 4ஆம் தேதி அதற்காக ஒரு தனிக் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இதனை நிறைவேற்றுவதற்கு சாரங்கபாணி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.