சென்னை: சத்தியமூர்த்தி பவனில் அம்பேத்கர் 134வது பிறந்தநாளையொட்டி, அவரது படத்திற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, முன்னாள் செயல் தலைவர் மறைந்த எச்.வசந்தகுமார் பிறந்தநாளையொட்டி, அவரது படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "பாஜகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் தேர்தல் அறிக்கையாக உள்ளது. கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு கொடுத்த தேர்தல் அறிக்கையில் ஒன்றைக்கூட நிறைவேற்றாதவர்கள்.
மக்களை ஏமாற்றுவதற்குத் தேர்தல் அறிக்கை அளித்துள்ளார்கள். ஏற்கனவே அளிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை நிறைவேற்றாதவர்கள். தற்போது எப்படி நிறைவேற்றப் போகிறார்கள். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ரூ.7500 கோடி ஊழல் நடந்துள்ளது என சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
தமிழ்நாட்டிற்குப் பிரதமர் அடிக்கடி வருவதற்குக் காரணம் அவருக்கு மிகப்பெரிய தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. அந்த தோல்வி பயத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறு வேஷம் போடுகிறார் நடிக்கிறார். தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழ் சிறந்த மொழி என்பார். வட மாநிலத்திற்குச் சென்றால் சமஸ்கிருதம் என்பார். இங்குத் தோசை சாப்பிட்டேன் என்பவர் வட மாநிலங்களில் பானி பூரி சாப்பிட்டேன் என்பார். மோடியின் பிரச்சாரம் இங்கு ஈடுபடாது.
செம்மொழி அந்தஸ்தது தந்தது காங்கிரஸ், செம்மொழி ஆய்வு மையம் கொண்டு வந்தது காங்கிரஸ். இதெல்லாம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அவர் தெரிவிக்க வேண்டும் என்றார். அம்பேத்கர் எழுதிய சட்ட திட்டத்தை பாஜக சிதைக்க நினைக்கிறது.