சென்னை: உடல்நலக்குறைவால் மறைந்த முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளருமான மறைந்த முரசொலி செல்வம் (84) உடல் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடலை கட்டியணைத்து கதறி அழுந்தார்.
இதையடுத்து தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக பிரமுகர் அர்ஜுன மூர்த்தி, தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் மனைவி சங்கீதா, கவிஞர் வைரமுத்து, உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "இன்று காலை எழுந்து பல் துலக்கி காபி குடித்துவிட்டு சிறிது நேரம் உறங்க செல்கிறேன் என்று சொன்னவர் சிற்றுண்டிக்கு எழுப்பும் பொழுது எழவில்லை என முதலமைச்சர் அவர்களே என்னிடம் தெரிவித்தார். முரசொலி செல்வம் அனைவருக்கும் வேண்டியவர். எதிர்க் கட்சியினரையும் அரவணைத்து செல்பவர்.
கோபாலபுரத்தில் தீபமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தார். இன்று நம்மையெல்லாம் சோகத்தில் அழைத்துச் சென்று விட்டார். திமுகவிற்கு முரசொலி இறப்பு பேரிழப்பாகும். அவரது புகழ் திராவிட இயக்க வரலாற்றில் அழியா புகழோடு நிலைத்து நிற்கும்" என தெரிவித்தார்.