சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி கூடுகிறது. முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நடைப்பெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு 6.64 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், இதன் மூலம் சுமார் 27 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழக முதல்வர் ஸ்பெயின் சென்று முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன் தொடர்ச்சியாக, முதலீடுகளை தமிழகத்தில் ஈர்க்கும் வகையில் வருகிற 27ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ளார். அங்குள்ள முக்கிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்கும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆக உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் வருகிற 13ந் தேதி காலை 11.00 மணிக்கு நடைப்பெற உள்ளது. அமைச்சரவையில் விவாதிக்கப்படும் பொருள் குறித்த குறிப்பு தனியே அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.