சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு (ஜூலை 5) மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இச்சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 8 தனிப்படைகள் அமைத்து தப்பிச் சென்ற கொலையாளிகளை வலைவீசித் தேடிவந்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்:இதற்கு மத்தியில், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக அண்ணாநகர் துணை ஆணையர் முன்னிலையில் காட்பாடி பகுதியைச் சேர்ந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேர் கைது சரணடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ''ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம்" என சரணடைந்தவர்களில் அருள் என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேத பரிசோதனை: இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் மாற்று வழியில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடல் இன்று காலை இரண்டு மருத்துவர்கள் மூலமாக பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுவதால், சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் படுகொலை: இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையை கண்டித்து ராமாபாய் அலுவலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. அதில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், ''ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை திட்டமிட்ட அரசியல் படுகொலை ஆகும். அதனால், இக்கொலை வழக்கை சிபிஐ கொண்டு விசாரிக்க வேண்டும்.