வேலூர்:பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேலூரில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி சண்முகம் ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வேட்பாளர் ஏ.சி சண்முகம், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜி.கே வாசன், “வேலூர் தொகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேல் ஜாதி, மதம், மொழி மற்றும் இனம் இவைகளுக்கு அப்பாற்பட்டு வாக்காளர்களைக் கூட்டுக் குடும்பமாக நினைத்து அவர்களுடைய வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ந்து பதவியிலிருந்தாலும் சரி மற்றும் இல்லாவிட்டாலும் சரி என்று பொதுமக்களுக்குத் திட்டங்களைக் கொடுக்கும் பரந்த உள்ளம் கொண்ட வேட்பாளர் தான் ஏ.சி சண்முகம்.
ஏ.சி சண்முகம் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. வெற்றி வாய்ப்பு என்பது உறுதி என்பது மாற்றுக் கருத்து இல்லை. தமிழ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் சுற்றுப் பயணங்கள் என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிகளை அதிகரித்துக் கொண்டு போகிறது. அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு கொடுக்கிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மூப்பனார் மறைந்து 23 ஆண்டுகள் ஆகிறது.