ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ்குமார் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, “நமது நாட்டின் தேசிய விலங்கான புலி, நமது கலாச்சாரத்தோடும், பண்பாட்டோடும் ஒன்றிணைந்த உயிரினம் ஆகும். துல்லியமான கண்பார்வை கொண்ட புலியானது, இந்தியாவில் 17 மாநிலங்களில் வசிக்கின்றன.
உலகம் முழுவதும் இருக்கக்கூடிய புலிகளின் எண்ணிக்கையில், இந்தியாவில்தான் 80 சதவீதம் புலிகள் வசிக்கின்றன. புலிகளை பொறுத்தவரை, சுமத்திரன் டைகர் (Sumatran Tiger), சைபீரியன் டைகர் (Siberian Tiger), இந்தோ சைனீஸ் டைகர் (Indochinese Tiger), மலேயன் டைகர் (Malayan Tiger), சவுத் சைனா டைகர் (South China Tiger) என ஆறு வகைகள் உள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் ராயல் பெங்கால் புலிகள் (Royal Bengal Tiger) அதிகம் உள்ளன. மேற்குவங்க மாநிலத்தில் சுந்தரவனக் காடுகளில் வசிக்கும் வங்கப் புலிகள்தான் இவை. 2022ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்தம் 3 ஆயிரத்து 682 புலிகள் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம்.
இந்தியாவில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கையில், தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள ஐந்து புலிகள் காப்பகம் மூலமாக, புலிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காடுகளில் வசிக்கும் புலிகள் 15 ஆண்டுகள் வரையும், உயிரின பூங்காக்களில் பராமரிக்கப்படும் புலிகள் 20 ஆண்டுகள் வரையும் உயிர் வாழ்கின்றன.