தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 600 ஆண்டுகள் பழமையான தர்பார் மண்டபத்தில் உள்ள சுவர் ஓவியங்கள் மற்றும் கட்டட பராமரிப்பு பணிகள் சுமார் ரூ.6.25 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அறிவித்த பணிகள் குறித்து, சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் த.வேல்முருகன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மற்றும் குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, அருள் உள்ளிட்டோர் தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்று வரும் பணிகளை நேற்று (ஜன.29) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன், "தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள தர்பார் மண்டபத்தில் மராட்டியர் கால ஓவியங்களை பழமை மாறாமல் பாதுகாக்கவும், தர்பார் மண்டபத்தின் கட்டட பகுதிகளை புனரமைப்பு செய்யப்பட வேண்டிய பணிகள் ரூ.6 கோடியே 25 லட்சம் மதிப்பில் அரசு நிதி அளித்து, அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது 35 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
மேலும் மிகவும் பழமையான நூலகங்களில் ஒன்றான சரஸ்வதி மஹால் நூலகம், அருங்காட்சியகம் ஆகியவற்றில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகள் ஆகியவற்றையும் இந்த குழு பார்வையிடப்பட்டன. இங்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க 600 ஆண்டுகள் முதல் 300 ஆண்டுகள் வரை உள்ள ஓலைச்சுவடிகளும், வரலாற்று எச்சங்களும், வரலாற்றுப் பக்கங்களில் நாம் காண முடியாத பல செய்திகள் அடங்கிய ஓலைச் சுவடிகள் எல்லாம் இருப்பதாக சம்பந்தப்பட்ட சமஸ்கிருத பண்டித் ஆசிரியர்கள் இக்குழுவுக்கு விளக்கி தெரிவித்துள்ளனர்.