சென்னை:சென்னையைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரிடம் தங்களது நிறுவனத்தில் வாடிக்கையாளரிடமிருந்து முதலீடு பெற ரிசர்வ் வங்கியில் உரிய அனுமதி பெற்றுள்ளதாகவும், முதலீடு செய்யும் பணத்தை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப் போவதாகவும், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தங்கம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தகத்தில் முதலீடு செய்ய இருப்பதாகக் கூறி, ஸ்வர்ணதாரா குழுமத்தினர் சில ஆவணங்களை அவரிடம் காட்டியுள்ளனர்.
மேலும், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 100 சதவீதம் லாபத்தை வருடா வருடம் கொடுப்பதாகவும், மூன்று வருடத்திற்குப் பிறகு முதலீடு செய்த தொகையை திருப்பிக் கொடுத்து விடுவதாகக் கூறியுள்ளனர். இவர்கள் கூறியதை நம்பிய ராஜகோபால், கடந்த 2015ஆம் ஆண்டு 3 லட்சம் ரூபாயை முதலீடு செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, முதலீடு செய்த மூன்று லட்சத்திற்கு 2015 முதல் 2018ஆம் ஆண்டு வரை, மூன்று வருடங்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் வீதம் பெற்றுள்ளார். இதனால் அவர்கள் மீது அதீத நம்பிக்கை வைத்த ராஜகோபால், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 61 பேரை ஸ்வர்ணதாரா நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளார்.
இதன் மூலம் 2.40 கோடி ரூபாய் வரை அந்நிறுவனத்தினர் முதலீடாக பெற்றுள்ளனர். அதேபோல், சென்னையைச் சேர்ந்த சுப்பையா என்பவரும், அவருடன் 25 நபர்கள் சேர்ந்து ஸ்வர்ணதாரா நிறுவனத்தில் 1.49 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட ஸ்வர்ணதாரா குழுமம், முதலீட்டு பணத்திற்கு லாபத்தை தராமலும், முதலீட்டு தொகையை திருப்பி தராமலும் மோசடியில் ஈடுபட்டது.