சென்னை: பொது காப்பீட்டு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு நிலுவை தொடர்பாக மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத்தில் அரசு பொது காப்பீட்டு ஊழியர்கள் ஊதிய உயர்வு கடந்த 2022 ஆகஸ்ட் 1 இல் நிலுவையாகி, தற்போது 2 ஆண்டுகள் முடிவடையும் நிலையிலும், அங்கு ஊதியம் மாற்றம் செய்யப்படவில்லையே எனவும், 2023 - 2024-ல் முந்தைய ஆண்டின் நிலைமையை மாற்றி லாபகரமான சேவையை உறுதி செய்துள்ள பொது காப்பீட்டு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தாமதமாவது ஏன்? என்ற கேள்வியை (எண் 79/22.07.2024) எழுப்பி இருந்தேன்.
அதற்குப் பதிலளித்த நிதி அமைச்சரே, இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பொது காப்பீட்டு நிறுவனங்கள் முந்தைய ஆண்டில் ரூ.3,529 கோடி நஷ்டத்தைச் சந்தித்தன. இன்று அந்த நிலைமை மாற்றப்பட்டு, 2023 - 24-ல் ரூ.7,588 கோடி லாபம் ஈட்டும் நிலைக்கு முன்னேறியுள்ளன என்பதை தனது பதிலிலும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கான பேச்சு வார்த்தைகள் அரசு பொது காப்பீட்டு நிறுவனங்களின் சங்கம் (GIPSA) மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் / பேச்சு வார்த்தை வாயிலாக நடைபெற்று தீர்வு காணப்படுவது நடைமுறை எனவும், அரசிற்கு இதுவரை அரசு பொது காப்பீட்டு நிறுவனங்களின் சங்கத்திடமிருந்து முன்மொழிவு ஏதும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.