சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை (ஜன.14) பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தொண்டர்களுடன் பொங்கல் வைத்து இன்று கொண்டாடினார்.
அப்போது பாஜக தொண்டர்கள் பொங்கலோ பொங்கல், தாமரை பொங்கல், பாஜக பொங்கல் என கோஷமிட, தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் வைத்து மகிழ்ந்தார்.
ஏமாற்றத்தோடு பொங்கல் ஆரம்பிக்கிறது
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், '' தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துகள். பொங்கல் பரிசோடு சாமானிய மக்களுக்கு ஆரம்பித்திருக்க வேண்டிய பொங்கல், ஏமாற்றத்தோடு ஆரம்பித்திருக்கிறது. கடந்த ஆட்சியில் பொங்கல் பரிசு அதிகமாக அளிக்க வேண்டும் கூறிய முதலமைச்சர் தற்போது ஒரு ரூபாய் கூட தற்போது கொடுக்காதது கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்.
ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் அனைத்து கட்சிகளும் புறக்கணித்துள்ளது, திமுகவை அனைத்து கட்சிகளும் புறக்கணித்துள்ளது என்றுதான் அர்த்தம். தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதரியாக, முன்னாள் ஆளுநர் என்கிற முறையில், தமிழக ஆளுநரும், முதலமைச்சரும் அமர்ந்து பேச வேண்டும் என பொங்கலன்று கோரிக்கை வைக்கிறேன். ஆளுநர் மற்றும் முதலமைச்சரின் கருத்து வேற்றுமைகள் மக்களுக்கு பயன் தராது.
ஆளுநருடன் அமர்ந்து பேச வேண்டும்
ஆளுநரும், முதலமைச்சரும் மாநில பிரச்சினைகளின் போது அமர்ந்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என அரசியலமைப்பு கூறுகிறது. ஆளுநரும், முதலமைச்சரும் கருத்து வேற்றுமையை மறந்து அமர்ந்து தோழமையுடன் பேசி துணை வேந்தர் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றிற்கு தீர்வு காண வேண்டும். இதனைக் கூற எனக்கு தகுதி உள்ளது.
இதையும் படிங்க: “அதிமுக, பாஜகவுக்கு டெபாசிட் கூடக் கிடைக்காது என பயம்” - அமைச்சர் சேகர்பாபு
மத்திய அரசுடன் இணக்கமாகவும், இணக்கமில்லாமலும் செயல்படும் இரண்டு மாநிலங்களின் ஆளுநராக ஒரே நேரத்தில் இருந்துள்ளேன். தெலங்கானாவில் இணக்கமின்மையால் மக்கள் பாதிக்கப்பட்டதும், புதுச்சேரியில் இணக்கமாக செயல்பட்டதால் மக்கள் பெற்ற நன்மைகளும் எனக்கு தெரியும். நல்லது செய்பவர்களாக இருந்தால் மட்டுமே மக்கள் ஒத்துக்கொள்வார்கள்.
மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது நல்லதல்ல. தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிற வகையில் மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு பின்பற்ற வேண்டும். கலைஞர் கைவினைஞர் திட்டத்தைவிட விஷ்வகர்மா திட்டத்தின் மீதுதான் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
திமுக நேர்மையான போர்வீரன் அல்ல
டெபாசிட் இல்லாததால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை என அமைச்சர்கள் கூறுவது பற்றி கவலைக் கொள்வதில்லை. போர்களம் என்றால், திமுக நேர்மையான போர்வீரன் அல்ல. முதுகில் குத்துபவர்கள் திமுக. திமுக உடனான போருக்கு பாஜக தயாராக இல்லை. என் போட்டியை ஏற்றுக் கொள்ளும் தகுதி திமுகவுக்கு இல்லை. திமுகவை எதிர்த்து அனைத்துக் கட்சியினரும் போட்டியிடவில்லை என்றால் திமுக வெட்கித் தலைக்குணிய வேண்டும். நம்பிக்கையோடு போட்டியிட யாரும் வராமல் இருப்பது திமுகவுக்கு பெருமை அல்ல. சிறுமைதான்.
புயல் எங்கே சென்றது?
முதலமைச்சர் புயல் வேகத்தில் செயல்படுகிறார் என்றால் புயல் மீதே எனக்கு சந்தேகம் வருகிறது. வேங்கைவயல், நீட் தேர்வு ரத்து ஆகியவற்றில் புயல் எங்கே சென்றது? அமைச்சர் சேகர்பாபு எதனை வேண்டுமானாலும் சொல்வார் அவருக்கு வேறு வழியில்லை. திமுக மக்களை சுயமாக சிந்திக்க விடவில்லை. அரசு நேர்மையாக தேர்தல் நடத்தும் வழிமுறைகளை அரசு ஏற்படுத்தவில்லை.
சீமான் எங்களுக்கு பி டீம் இல்லை 'தீம்'. பெரியார் பிம்பத்தை உடைப்பவர்கள் யாராக இருந்தாலும் அது சரியென்று கூறுவோம். பெரியார் சமூக சீர்திருத்தவாதி, இல்லையென்று சீமான் கூறியது வரவேற்கத்தக்கது. தைப் பிறந்தால் வழி பிறக்க வேண்டும், தமிழ்நாட்டிற்கு 'வலி' பிறக்க கூடாது என்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றுத் தேர்தல் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.