திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும், வெளியூர் மாணவர்கள் தங்கும் வகையில், கல்லூரி வளாகத்திற்குள் விடுதி வசதிகளும் உள்ளன. இந்த நிலையில், 4ஆம் ஆண்டு பயிலும் இரண்டு மாணவர்கள், முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களை நேற்று (புதன்கிழமை) ராகிங் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, நான்காம் ஆண்டு மாணவர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மத்தியில் கடும் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விடுதி துணைக் காப்பாளரான மருத்துவர் கண்ணன் பாபு என்பவரின் கார் கண்ணாடியை சேதப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி ராகிங் கமிட்டி தலைமையில் விசாரணை மேற்கொண்டனர். அதில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ராகிங் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ராகிங் செய்த நான்காம் ஆண்டு மாணவர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், விடுதி வாசலில் நிறுத்தப்பட்டிருந்த விடுதி துணைக் காப்பாளரான டாக்டர் கண்ணன் பாபுவின் கார் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது இன்னும் தெரிய வராத நிலையில், மருத்துவர் கண்ணன் பாபு இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே, மருத்துவர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதி அளித்துள்ளதாக நெல்லை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:வளர்ப்பு நாயால் நடந்த தகராறு.. நாயின் உரிமையாளரின் குடும்பத்தினரைத் தாக்கிய இளைஞர்கள்!