திருவள்ளூர்: திருவள்ளூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் தங்களுக்கு எந்தவித தொந்தரவும் அளிக்கவில்லை எனக் கூறி ஆவடி - திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அடுத்த செவ்வாய்பேட்டையில் அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் செவ்வாய்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் படித்து வரும் நிலையில், மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக, ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கு ஏராளமான புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, கடந்த ஜூலை 1-ம் தேதி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பள்ளியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். மேலும், பள்ளி மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் தீவிர விசாரணை நடத்தியுள்ளார். அதில், மாணவிகள் சிலர் கணித ஆசிரியர் ஜெகதீசன் மற்றும் அறிவியல் ஆசிரியர் பிரேம்குமார் ஆகிய 2 பேரும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிக்கை பெறப்பட்டதை தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் மூலம் இது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, புகார் தெரிவிக்கப்பட்ட 2 ஆசிரியர்களும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
இதனையடுத்து, பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து வழக்குப்பதிவு செய்து 2 ஆசிரியர்களையும் போக்சோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், 2 ஆசிரியர்களை போக்சோவில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர்-ஆவடி சாலையில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 ஆசிரியர்களும் மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்கள் என்றும், வேண்டுமென்றே அவர் மீது பொய்யான புகார் கொடுத்து போக்சோவில் கைது செய்து இருப்பதால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம், வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் காவல் துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், கைது செய்யப்பட்ட 2 ஆசிரியர்களையும் விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் மாணவிகளுக்கு உறுதுணையாக அவர்களது பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர், எழுத்துப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் புகார் மனுக்களை எழுதி கொடுத்துள்ளனர். இதனையடுத்து, புகார் மனுக்கள் ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என காவல் துறையினர் மாணவிகளிடம் கூறிய நிலையில், மாணவிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு விலகிச் சென்றுள்ளனர். 4 மணிநேரத்திற்கும் மேலாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க:புதுக்கோட்டையில் திருச்சி ரவுடி என்கவுண்டர்! - Pudukkottai Encounter