தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளியில் விளையாடும்போது மாணவிக்கு காலில் எலும்பு முறிவு.. கண்ணீருடன் கதறும் தாய்!

பள்ளியில் விளையாடி கொண்டிருந்த 6ஆம் வகுப்பு சிறுமிக்கு கால் முறிவு ஏற்பட்ட நிலையில், இதற்கு பள்ளி நிர்வாகத்தினரின் அலட்சியமே காரணம் எனக்கூறி சிறுமியின் தாயார் பள்ளியின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்ணாவில் ஈடுபட்ட  சிறுமியின் தாயார்
தர்ணாவில் ஈடுபட்ட சிறுமியின் தாயார் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 8 hours ago

சென்னை: சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவரின் மகள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 17 ஆம் தேதி மதியம் இவர் பள்ளியில் சீசாவில் விளையாடிக்கொண்டிருந்தபோது, கீழே தவறி விழுந்து கால் எலும்பு முறிந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயாரிடம் தொலைபேசி மூலம் பள்ளி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர் உடனே பள்ளிக்கு சென்று சிறுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிறுநீர் கழிக்கும் இடத்தில் ரத்தக்கட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனது மகள் படுகாயம் அடைந்ததற்கு பள்ளி நிர்வாகத்தினரின் அலட்சியமே காரணம் எனக்கூறி சிறுமியின் தாயார் இன்று பள்ளியின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க:மாணவர் விடுதியை காலி செய்த திருநெல்வேலி தனியார் நீட் அகாடமி நிர்வாகம் - காரணம் என்ன?

இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியது. உடனே அங்கு வந்த பள்ளி நிர்வாகத்தினரும், போலீசாரும் அவரை சமாதானம் செய்ய முயற்சித்தனர். இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிறுமியின் தாய் மகாலட்சுமி, "எனது மகளுக்கு காயம் ஏற்பட்டுவிட்டதாக கடந்த வியாழக்கிழமை போன் செய்து கூறினர். நேரில் வந்து பார்த்தபோது காலில் 4 ஸ்கேல் மற்றும் பஞ்சினை வைத்து கட்டுப்போட்டு வைத்திருந்தார்கள்.

ஒரு மணி நேரமாக என் மகள் வலியில் துடித்துள்ளார். ஆனால் அதுவரை எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. மருத்துவமனையில் சேர்த்த பின்னர் எனது மகள் கதறி அழுதார். ஒரு வாரமாக சிகிச்சை நடைபெற்று வருகிறது. எனது மகள் நடக்க முடியாமல், சிறுநீர் கழிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார். ஆனால் பள்ளி நிர்வாகம் ஒரு வார்த்தை கூட விசாரிக்கவில்லை. உடற்கல்வி ஆசிரியர் இல்லாத நேரத்தில் எனது மகள் விளையாடி விழுந்துள்ளார். அதை அவர்கள் கண்காணிக்கவில்லை. எனது மகள் படுகாயத்திற்கு நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்" என கண்ணீர் மல்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details