திருப்பூர்: திருப்பூர் ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் பங்குச்சந்தை போலி அப்ளிகேஷன் வழியாக முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என பெண் போன்று ஆள்மாறாட்டம் செய்து, ரூ.24 லட்சம் மோசடி செய்த இருவரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும், பங்குச் சந்தையிலும் முதலீடு செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தொடர்பாக வழிகாட்டும் வாட்ஸ் அப் குழு ஒன்றில் இணைந்துள்ளார்.
இந்நிலையில், அடையாளம் தெரியாத ஒரு எண்ணிலிருந்து ராஜேஷுக்கு வாட்ஸ்-அப்பில் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், பேசியவர், தான் ஒரு பெண் என்றும், தனக்குத் தெரிந்த ஒரு அப்ளிகேஷனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனவும், அதற்காக அந்த அப்ளிகேஷனைப் பதிவிறக்கம் செய்யுமாறும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து ராஜேஷும் அந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துள்ளார். மேலும், அதில் தனது வங்கிக் கணக்கை இணைத்து பல தவணைகளாக சுமார் ரூ.24 லட்சம் வரை பணத்தை முதலீடு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க நினைத்தபோது, மீண்டும் ரூ.10 லட்சம் கட்டினால் மட்டுமே மொத்த பணமும் கிடைக்கும் என குறுந்தகவல் வந்துள்ளது.