மதுரை: ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின நாட்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால், காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி, சுகாதாரம், தீயணைப்பு, வேளாண்மை, தோட்டக்கலை, கல்வி, பொதுப் பணி, கூட்டுறவு உள்ளிட்ட அரசு துறைகளைச் சோ்ந்த அலுவலா்களில் சிறப்பாக பணியாற்றி அலுவலர்களுக்கு விருதும், சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கு எந்தவித அரசாணையோ அல்லது நிதி ஒதுக்கீடோ கிடையாது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகத் தெரியவந்துள்ளது. இது அரசு அலுவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர் ராமகிருஷ்ணன் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், சிறந்த அரசு அலுவலர் என்ற பணி பாராட்டுச்சான்றும், பதக்கமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சான்றிதழ் அச்சடிப்பதற்கும், பதக்கம் வழங்குவதற்கும் எந்த நிதி பயன்படுத்தப்படுகிறது? இந்த நிகழ்வுக்கு அரசு அனுமதி உள்ளதா? என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட்கப்பட்டது.
இதற்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இந்நிகழ்வுக்கு எந்த ஒரு அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நிகழ்வைக் கண்காணிக்கக்கூடிய சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத்துறை அலுவலகத்தில், இதற்கான கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அத்துறையிலிருந்து, இந்த நிகழ்வுக்கு எந்த வித அரசு அனுமதியும் இல்லை, இதற்காக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என பதில் அளித்துள்ளனர்.