சேலம்:சேலம் மாவட்டம் முள்ளுவாடிகேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாட்டு மேடை நடன கலைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஐந்தாவது ஆண்டு கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், கேரளம், ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்தும் ஆண், பெண் மேடை நடன கலைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாட்டின் மேடை நடன கலைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சுஜா முருகன் கூறுகையில், "ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுக்காக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் வழங்குகின்றனர். ஒருநாள் நிகழ்ச்சி நடத்தினால் இந்த தொகை தான் எங்களுக்கு கிடைக்கும் ஊதியம்.
இந்த கலை நிகழ்ச்சியை நடத்துவதற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்றால் 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை காவல் துறையினர் லஞ்சம் கேட்கின்றனர். அனுமதி வழங்குவதற்கு காவல் நிலையத்தில் பணம் கேட்பது எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக மேடை அமைப்பாளர்கள், நடன கலைஞர்கள் ஆகியோர்களுக்கு உரிய ஊதியம் வழங்க முடியவில்லை.