ரயில்வே ஊழியர் ஞானசேகரன் பேட்டி (Credits - ETV Bharat TamilNadu) விருதுநகர்:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரயில்வே ஊழியரை, பால் வியாபாரி தாக்கிய சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் இருப்புப்பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் பண்டிதன்பட்டி ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று பணியில் இருந்த நிலையில், ரயில் வரும் நேரத்தில் ரயில்வே கேட்டை அடைத்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மல்லியைச் சேர்ந்த பால் வியாபாரி ராஜா என்பவர், ரயில்வே கேட்டை திறக்கச் சொல்லி தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, ஞானசேகரன் ரயில்வே கேட்டை திறக்காததால் ஆத்திரமடைந்த பால் வியாபாரி ராஜா, அவரை தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து ஞானசேகரன் ரயில்வே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், ரயில்வே ஊழியர் ஞானசேகரனைத் தாக்கிய பால் வியாபாரி ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும், தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் தாக்கப்படுவதால், ரயில்வே காவல்துறையினர் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.ஆர்.எம்.யு சங்கத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பால் வியாபாரி ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து எஸ்.ஆர்.எம்.யு சிவகாசி கிளைச் சங்கத்தின் உறுப்பினர் கணேசன் கூறுகையில், “ரயில்வே பணியில் இருந்த ஊழியரை பால் வியாபாரி தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரை தாக்கியுள்ளார். தொடர்ச்சியாக, இப்பகுதியில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து ரயில்வே போலீசாரிடம் முன்னதாகவே புகார் அளித்துள்ளோம். இந்த நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என எஸ்.ஆர்.எம்.யு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ரயில்வே ஊழியர் ஞானசேகரன் கூறுகையில், “அதிகாலையில் பணியில் இருந்த நிலையில், அங்கு வந்த பால் வியாபாரி ரயில்வே கேட்டை திறக்கச் சொல்லி தகாத வார்த்தைகளில் பேசினார். தொடர்ந்து என்னைத் தாக்கினார். எனவே, இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க:அபாயச் சங்கிலி வேலை செய்யவில்லையா? கர்ப்பிணி உயிரிழப்பு குறித்து தெற்கு ரயில்வே விசாரணை! - Pregnant Woman Falling From A Train