மாற்றுத்திறனாளி வங்கித் தேர்வில் தேர்ச்சி மதுரை:மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 4 மாதங்களாக படித்து வந்த பார்வைக் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி இளைஞர் ஶ்ரீகாந்த், தனியார் வங்கி நடத்திய போட்டித் தேர்வில் உதவி மேலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர், பார்வைக் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி இளைஞர் ஶ்ரீகாந்த் (25). இவரது தந்தை மாரிமுத்து ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். வீட்டிற்கு ஒரே மகனான ஶ்ரீகாந்த், தனது கடின உழைப்பின் காரணமாக பி.ஏ., பி.எட். முடித்துள்ளார். அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என விருப்பம் கொண்ட ஸ்ரீகாந்த், டி.என்.பி.எஸ்.சி, வங்கித் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுதி வந்துள்ளார்.
இந்நிலையில், 4 மாதங்களுக்கு முன்பாக, மதுரை நத்தம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக மாற்றுத்திறனாளிகள் பிரிவில், பிரெய்லி முறையில் வடிவமைக்கப்பட்ட போட்டித் தேர்வு புத்தகங்களை படிக்கத் தொடங்கியுள்ளார். 4 மாதங்களாக இடைவிடாது படித்த ஸ்ரீகாந்த், தனியார் வங்கி நடத்திய போட்டித் தேர்வில் உதவி மேலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீகாந்த் கூறியதாவது, “தேர்வில் வெற்றி பெற்று வங்கி உதவி மேலாளராக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் பணியாளர்கள் உதவியுடன் வங்கித் தேர்வில் வெற்றி பெற முடிந்தது. மேலும், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பிரிவில், என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் படித்து போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்” என அவர் கூறினார்.
இதையும் படிங்க:"தமிழக அரசின் திட்டங்கள் வெற்றியடைய, மகளிர் சுய உதவிக் குழுவின் பங்களிப்பு அதிகம்" - உதயநிதி ஸ்டாலின்!