சென்னை: சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் ஃபிட்ஸ் ஏர்லைன்ஸ் (FitsAir airline) என்ற தனியார் பயணிகள் விமானம், வழக்கம்போல் நேற்று புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வரும், ராமச்சந்திரன்(45), ஹனீஷா(40) தம்பதியினர் இருவரும், அந்த விமானத்தில் இலங்கை செல்வதற்கு வந்துள்ளனர்.
அப்போது, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் இருவரின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களைப் பரிசோதித்த போது இருவரும் இந்திய பாஸ்போர்ட்கள் வைத்திருந்துள்ளனர். ஆனால் இருவரும் இலங்கைத் தமிழர்கள் போல் பேசியதாகக் கூறப்படுகிறது. அதனால், சந்தேகமடைந்த குடியுரிமை அதிகாரிகள் இருவரையும் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில், இருவரும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் எனவும், பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வருவதாகவும், இவர்களுக்கு ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இருப்பதாகவும், அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் அதை ஏற்க மறுத்த குடியுரிமை அதிகாரிகள், ஏஜெண்டுகள் மூலம் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து போலி இந்திய பாஸ்போர்ட் வாங்கி வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.