மதுரை:ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "ஒத்தக்கடை ஐயப்பன் நகர் பகுதியில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்கவும், போதைப் பொருட்கள் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிறப்புப் பிரிவு உருவாக்க உத்தரவிட வேண்டும்" என மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "நீதிமன்றம் போதை தடுப்பு வழக்கு ஒன்றில் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த ஆய்வாளரே உயர் நீதிமன்ற மதுரைக்கிளை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.
அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.செந்தில்குமார், தமிழக போதை தடுப்பு பிரிவின் சார்பில் அறிக்கையை சமர்ப்பித்தார். அதில், “பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. கஞ்சா மட்டுமின்றி, ஹெராயின் உள்ளிட்ட பிற போதைப் பொருட்களும், போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.