தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குட்கா முறைகேடு வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது சிறப்பு நீதிமன்றம்! - GUTKA SCAM CASE

குட்கா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2025, 7:47 AM IST

Updated : Jan 25, 2025, 11:23 AM IST

சென்னை:குட்கா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நபர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்றதாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழ்நாடு முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 27 பேருக்கு எதிராகக் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் குற்றஞ்சாட்டப்பட்ட முருகன் என்பவர் மரணமடைந்துவிட்டதால், அவருக்கு எதிரான வழக்கு மட்டும் கைவிடப்பட்டு மீதமுள்ள 26 பேருக்கு எதிரான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணை சென்னையில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன்பு நேற்று (ஜன.24) விசாரணைக்கு வந்தது.

அப்போது, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் ஆஜராகவில்லை. பின்னர், சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுமார் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் இறுதி அறிக்கையை (கூடுதல் குற்றப்பத்திரிகை) காகித வடிவிலும், 492 ஆவணங்கள் போன்றவற்றை பென்-ரைவ் மூலமாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழங்குவதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஜாபர் சாதிக் வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் திரைப்பட இயக்குநர் அமீர் ஆஜர்!

அப்போது மனுதாரர்கள் தரப்பில் பென்-ட்ரைவ் முறையில் வழங்குவதற்கு ஆவண சான்றிதழ் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து நேற்று வழக்கு விசாரணைக்கு ஆஜரான மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், செந்தில்முருகன், நவநீதகிருஷ்ணன், சேஷாத்ரி, வி.ராமநாதன், ஜோசப் தாமஸ், செந்தில் வேலவன், குறிஞ்சி செல்வன், டாக்டர் லட்சுமி நாராயணன், வி.சம்பத், மனோகர், ஆர்.கே.ராஜேந்திரன் ஆகிய 14 பேருக்கு கூடுதல் இறுதி அறிக்கை வழங்கப்பட்டது.

மேலும், வழக்கில் ஆஜராகாதவர்கள் அடுத்த விசாரணைக்குள் கூடுதல் குற்றப்பத்திரிக்கையின் நகல்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்த நீதிபதி, விசாரணையை மார்ச் 10ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Last Updated : Jan 25, 2025, 11:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details