சென்னை:பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்குகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் இந்த மலையைச் சுற்றி கிரிவலம் செல்ல பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
நீதிமன்றம் உத்தரவு:இந்தநிலையில் கோயில் அமைந்துள்ள மலையில் கிரிவலப் பாதையின் இரு புறமும் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், வனத்துறை, வருவாய்த்துறை, விஏஓ உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர் எம்.சி.சுவாமி அடங்கிய குழுவை அமைத்து மலையில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை நேரில் ஆய்வு செய்து நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு:நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து, நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமைக்கப்பட்ட வழக்கறிஞர் M.C.சாமி ஆகியோர் ஆக்கிரமிப்புகள் குறித்து முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.