சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழக சட்ட ஒழுங்கு பிரச்சனை, நீட் தேர்வு ரத்து, அரசு திட்டங்கள், அண்ணா பல்கலை கழக பாலியல் வன்கொடுமை சம்பவம் என பல விவகாரங்களை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி, அதற்கு முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை பதில் அளித்து வருகின்றனர். குறிப்பாக, அண்ணா பல்கலை விவகாரமும், அதிமுக ஆட்சியின்போது நிகழ்ந்த பொள்ளாச்சி சம்பவமும் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினமும் இவ்விரண்டு சம்பவங்கள் குறித்து முதல்வருக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் சூடான விவாதம் நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி, '' அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பது பிரதான கோரிக்கை. இதை வைத்து அரசியல் செய்யாமல் அவியலா செய்ய முடியும்? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
12 நாட்களில் என்ன நடந்தது?
அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ''பொள்ளாச்சி சம்பவத்தில் புகார் அளித்தவுடன் எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை. ஆனால், அண்ணா பல்கலைக் கழகத்தில் புகார் கொடுத்த உடனே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 12 நாட்கள் கழித்து தான் கைது நடவடிக்கை செய்யப்பட்டது.
அந்த 12 நாட்களில் என்ன நடந்தது, யாரை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். நீங்கள் உரிய நடவடிக்கை புகார் அளித்தும் எடுக்கவில்லை. நீங்கள் கூறியதை நிருபித்துவிட்டால் நான் தண்டனை ஏற்கிறேன். நான் கூறியதை நிரூபித்துவிட்டால் என்ன தண்டனை தந்தாலும் ஏற்பீர்களா? என்றார். மேலும், பொள்ளாச்சி சம்பவத்தில் எடுக்கப்பட்ட தாமதமான நடவடிக்கை குறித்து ஆதாரத்தை வழங்கப்போவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.