மதுரை:தமிழ்நாட்டில் கோடைக் காலம் துவங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் (மே 4) முதல் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேலாக வெப்பம் பதிவாகி வருகிறது.
வெயிலுடன் சேர்ந்து அனல் காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள மாவடங்களில் 100 டிகிரியை தாண்டியே வெப்பத்தின் அளவு தொடர்ந்து பதிவாகி வருகிறது.
இதனால் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அதிக வியர்வை வெளிப்பட்டு உடலில் நீர் சத்து குறைகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பயணிகளுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள், ரயில்வே சாரண சாரணியர், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிர் மற்றும் தன்னார்வலர்கள் போன்ற பலர் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் ரயில் பயணிகளுக்கு இயற்கையான குளிர் குடிநீர் வழங்க மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, காரைக்குடி, தென்காசி, ராமநாதபுரம், பழனி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் மண் பானைகளில் சேமிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.