சென்னை:ரயில் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த வாரம் மீண்டும் சேவை இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது. அதேபோல், அரக்கோணம் ரயில்வே யார்டு பகுதியில் பாயிண்ட்ஸ் மற்றும் கிராசிங்கை மாற்றி அமைக்கும் பொறியியல் பணிகள் நடந்து வருகிறது.
இதன் காரணமாக, கோவை - சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 1ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. அதே செப்டம்பர் 1ஆம் தேதி வரை, கோவையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்படும் கோவை - சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12680) காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்.
காட்பாடி - சென்னை சென்ட்ரல் இடையே இந்த ரயில் இயங்காது எனவும், அதேபோல செப்டம்பர் 1ஆம் தேதி, சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை சென்ட்ரல் - காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மாலை 4.15 மணிக்கு காட்பாடியில் இருந்து புறப்பட்டு கோவை வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.