மதுரை:ரயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக மைசூரில் இருந்து காரைக்குடிக்கு ஆகஸ்ட் 14, 17 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பயணிகளின் வசதிக்காக மைசூர் - காரைக்குடி இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மைசூர் - காரைக்குடி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06295) மைசூரில் இருந்து ஆகஸ்ட் 14 மற்றும் 17 ஆகிய நாட்களில் இரவு 09.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.45 மணிக்கு காரைக்குடி வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் காரைக்குடி - மைசூர் சிறப்பு ரயில் (06296) காரைக்குடியில் இருந்து ஆகஸ்ட் 15 மற்றும் 18 ஆகிய நாட்களில் இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 09.10 மணிக்கு மைசூர் சென்று சேரும். இச்சிறப்பு ரயில்கள் மாண்டியா, மாடூர், ராம நகரம், கெங்கேரி, பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.