தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கச்சத்தீவைக் காப்பாற்றுவோம் என அண்ணாமலை கூறுவது தேர்தலுக்கான வெத்து அறிவிப்பு" - தென் சென்னை நாதக வேட்பாளர்! - Katchatheevu Issue

Katchatheevu Issue: தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தான் கச்சத்தீவைத் திரும்பப் பெற முடியும். கச்சத்தீவைக் காப்பாற்றுவோம் என அண்ணாமலை கூறுவது தேர்தலுக்கான வெற்று அறிவிப்பாகத்தான் நான் பார்க்கிறேன் என்று தென் சென்னை தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

Katchatheevu Issue
Katchatheevu Issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 7:57 PM IST

"கச்சத்தீவைக் காப்பாற்றுவோம் என அண்ணாமலை கூறுவது தேர்தலுக்கான வெத்து அறிவிப்பு" - தென் சென்னை நதக வேட்பாளர்!

சென்னை: வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலை 7 கட்டங்களாக நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில், வேட்பாளர்கள் தீவிரமாக வாக்காளர்களைச் சந்தித்து பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படாமல், புதிதாக வழங்கப்பட்ட மைக் சின்னத்தை வாக்காளர்களிடம் கொண்டு சேர்த்தும் அவர்களின் குறைகளைக் கேட்டும் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், தமிழ்ச்செல்வி ஈடிவி பாரத்துக்குச் சிறப்பு பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியின்போது, கச்சத்தீவை மீட்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "கச்சத்தீவைக் காங்கிரஸ் விட்டுக் கொடுத்தது. அந்த காங்கிரஸின் தோலின் மீது தான் திமுக தற்பொழுது நின்று கொண்டிருக்கிறது. காங்கிரசுக்கு எதற்கு 10 சீட்டு திமுக கொடுத்தது என தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியில் வார்டு மெம்பர்களே 10 பேர் இருக்க மாட்டார்கள் என கூறுகின்றனர்.

மேலும், காங்கிரஸ் கட்சியில் தெருவில் அடித்துக் கொள்ளாத குறையாகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட 10 இடங்களுக்கே நாடகம் ஆடுகின்றனர். கச்சத்தீவை மீட்பது குறித்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

பாஜக, காங்கிரஸ் கட்சி தீவை விட்டுக் கொடுத்தது என கூறுகின்றனர். காங்கிரஸ் உடன் இணைந்ததுதான் திமுக என கூறுகின்றனர். ஆனால், காங்கிரஸ் மற்றும் பாஜக இருவரும் கச்சத்தீவை மீட்க மாட்டார்கள் என்பது எங்களின் கருத்து.

தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தான் கச்சத்தீவின் முழுமையான வரலாறு தெரிந்து கொண்டு அதனைத் திரும்பப் பெற முடியும். கச்சத்தீவைக் காப்பாற்றுவோம் என அண்ணாமலை கூறுவது தேர்தலுக்கான வெற்று அறிவிப்பாகத்தான் நான் பார்க்கிறேன்.

திமுக திட்டங்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "திமுக சார்பில் மகளிர் உரிமைத் தொகை கொடுத்து விட்டு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டோம் என்கிறார். அதற்கு முன்னதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஓசி பஸ்ஸில் போகிறீர்கள் என கூறினார். உயர் கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் பேசக்கூடிய பேச்சா அது.

தலைவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் அவர்கள் கூறும் சொல் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அவர் கூறிய ஓசி ஓசி என்ற சொல்லுக்குப் பிறகு அவர் மீது இருந்த மதிப்பு எங்களுக்கு முழுவதும் போய்விட்டது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பேசும் பொழுது ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டோம் அதனால் தான் ஜொலிக்கிறோம் என கூறுகிறார். அது என்ன ஒரு வார்த்தை. அதற்குப் பெண் ஒருவர் கழிவறை கழுவிக் கூட 1000 ரூபாய் சம்பாதிப்பேன் நீங்களாகக் கொடுத்துவிட்டு ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்.

இலவசம் கொடுக்க முடியாது என முடிவு செய்ததால் உரிமைத்துறை கொடுக்கிறீர்கள். கல்லூரி மாணவிகளுக்கு 18 முதல் 21 வயது வாக்களிக்கும் வயது என்பதால் அவர்களுக்குப் புதுமைப்பெண் திட்டம் என கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் இந்த தேர்தல் முடிந்தவுடன் காட்சிகள் மாற்றம் அடையும்" என்று பதிலளித்தார்.

புதுமைப்பெண் திட்டம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "மாணவிகள் அரசு பணம் அளிப்பதால் தான் படிக்கச் செல்கிறேன் என செல்லவில்லை. அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் கழிவறை வசதிகள் எப்படி உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களில் மிகவும் சிரமம் அடைகின்றனர். கல்லூரிகளில் உள்ள கழிவறைகளில் கதவுகள் கூட சரியில்லாத நிலைமை தான் நீடிக்கிறது.

கழிவறைகளில் கதவின் தாழ்ப்பால் இல்லாத நிலை தான் உள்ளது. கட்டிடங்கள் மட்டுமே கட்டுகின்றனர் ஆனால் சுகாதார வசதி என்பது அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரிகளில் இல்லை. இந்த புதுமைப்பெண் திட்டம் வீணாக உள்ளது. ஒருபுறம் புதுமைப்பெண் திட்டத்தையும் மறுபுறம் டாஸ்மாக் கடையும் திறந்து வைத்து விற்பனை செய்கின்றனர்.

மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் படித்துவிட்டு வீட்டிற்குச் சென்று படிக்கும் பொழுது அங்கு குடித்துவிட்டு தகப்பன்கள் பேசுவதால் குழந்தைகளின் தூக்கம் கெட்டு விடுகிறது. அதனால் கல்லூரி மாணவிகள் கல்லூரிக்குத் தாமதமாகவும் தந்தை அடித்தால் முகம் வீங்கியும் வருவார்கள். இதற்கு டாஸ்மாக்தான் காரணம்" என்று கூறினார்.

தமிழச்சி தங்கபாண்டியன் தோழியாக இருக்கும் பட்சத்தில் அவரை எதிர்த்துப் போட்டியிடுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் இயல்பாக நல்ல தோழி. நான் தமிழ்த் துறையில் பணிபுரிந்தேன் அவர் ஆங்கிலத் துறையில் பணிபுரிந்தார். அவரை முன்னாள் முதல் கருணாநிதி அரசியலுக்கு வர வேண்டும் என அழைத்தார். அப்பொழுது எங்கள் தோழிகள் போக வேண்டாம் என கூறினார்கள். கருணாநிதி அவர் மீது வைத்திருந்த மதிப்பினால் அரசியலுக்கு அவர் வந்தார்.

அவர் அரசியலுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியானது தான் அதனை நான் மறுக்கவில்லை ஒரு பெண்ணாக அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். அவருக்கு நல்ல ஆங்கிலம் மற்றும் தமிழ் புலமை உண்டு. ஆனால் அதே நேரத்தில் அவர் மற்ற அரசியல்வாதிகளைப் போல் இருந்தது மிகவும் தவறானது. பாராளுமன்றத்தில் பேசும் அளவிற்கு நல்ல அறிவு புலமை உள்ள நீங்கள், ஏன் மக்களைச் சந்திக்கப் பயப்படுகிறீர்கள். உங்களை நம்பி வாக்களித்த மக்களை ஏன் சந்திக்கவில்லை?

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வீடுகளில் சாக்கடை நீர் அப்படியே இருக்கிறது. உங்கள் வீட்டுப் பக்கத்தில் சாக்கடை நீர் இருந்தால் நீங்கள் சுத்தப்படுத்தாமல் இருப்பீர்களா? உங்கள் வீட்டுக் கழிவுநீரைச் சுத்தப்படுத்தும் நீங்கள் மக்கள் வீட்டுக் கழிவுநீரைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது என்ன அர்த்தம். அவர் மேம்போக்கு அரசியலைச் செய்துவிட்டார். அவர் மக்களுடன் இறங்கிப் பழகி அவர்களுக்குத் தேவையானதைச் செய்யவில்லை" என்று தெரிவித்தார்.

பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் குறித்த கேள்விக்கு, "தமிழிசை சௌந்தர்ராஜன் அரசியலில் இருந்து எவ்வாறு ஓரம் கட்டலாம் என பார்த்து பாஜக தேர்தலில் இறக்கி உள்ளது. அவர் வாக்கு வாங்குவதிலேயே தெரிந்துவிடும். ஆகமொத்ததில், இத்துடன் ஆளுநர் பதவியும் போனது, எம்பி பதவியும் போனது. அவரின் ஆளுமை சிதைப்பதற்கான திட்டமாகவே இதனைப் பார்க்கிறேன்" என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க:கச்சத்தீவு விவகாரம்: "கலர் கலராக பிரதமர் மோடி பொய் சொல்கிறார்" - ஆர்.எஸ் பாரதி கடும் விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details