சென்னை: சென்னை தி.நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சியின் அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக மேல்நிலை பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவோடு சரத்குமார் இணைத்துக் கொண்டார்.
பின்னர் மேடையில் பேசிய அண்ணாமலை, "பாஜக குடும்பம் பெரிதாகி உள்ளது. சரத்குமாரின் ரசிகன் நான். நடிகராக மட்டுமல்லாமல் ஒரு மனிதராக வலம் வருபவர் நாட்டாமை அண்ணன் சரத்குமார். அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒரு தனித்துவம் உள்ளது.
சமத்துவ மக்கள் கட்சியின் அறிக்கையை நான் விரும்பி படிப்பேன். மக்களுக்குத் தேவையானதை வலியுறுத்தும் வகையில் பேசுவோம். மற்ற கட்சிக்காரர்கள் எல்லாரும் பேரம் பேசுவார்கள். ஆனால், சரத்குமார் அப்படியில்லை. தான் வந்தால் மோடிக்கு என்ன லாபம், நாட்டுக்கு என்ன லாபம் என்று தான் கேட்டார்.
கனத்த இதயத்துடனும் துணிவோடும், பணிவோடும், அன்போடு கட்சியை இணைத்துள்ளார். பாஜக சொந்தங்கள் சமத்துவ மக்கள் கட்சியினரை இருகரம் கொண்டு வரவேற்கிறோம். சமத்துவ மக்கள் கட்சியினர் ஏன் இந்த முடிவை எடுத்தோம் என வருத்தப்படும் அளவிற்கு இம்முடிவு இருக்காது.