தேனி:பெரியகுளம் அருகே உள்ள ஏ.புதுப்பட்டி புறவழிச்சாலை பகுதியில் நேற்று முன்தினம் பெரியகுளம் வடகரை காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையில் காவல்துறையினர் நள்ளிரவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, கேரளா பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அவர்களிடம் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, பெரியகுளம் காவல்துறையினர் வாகனத்தையும், வாகனத்தில் பயணித்த மூவரையும், விசாரணைக்காக பெரியகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வாகனத்தை முழுமையாக சோதனை மேற்கொண்ட பொழுது வாகனத்தில் சர்வதேச சந்தையில் கிடைக்கும் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் 30 பாக்கெட்டுகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பிடிபட்ட கொடைக்கானல் சேர்ந்த ஆரிப் என்ற நபரிடம் தொடர் விசாரணையின் போது தொடர்புடைய மேலும் ஏழு நபர்களின் விவரம் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஆரிப் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மொத்த விற்பனையாளர் யார்?, மேலும் இந்த போதை பொருள் கடத்தலுக்கு யார் உடந்தை, முக்கிய குற்றவாளியார்? தமிழகத்தில் எந்தெந்த நகரங்களில் விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறித்த விசாரணை மேற்கொண்டனர்.