தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் தீரன் பட பாணியில் கொள்ளையடிக்க முயன்ற ஆறு பேர் கைது...சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்குள் சுற்றி வளைத்த போலீஸ்!

கரூரில் தம்பதியின் வீட்டுக்குள் நுழைந்து கத்தி முனையில் கொள்ளை அடிக்க முயன்ற ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதானவர்கள், சம்பவம் நடந்த வீடு
கைதானவர்கள், சம்பவம் நடந்த வீடு (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

கரூர்: மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே செங்கல் கிராமத்தில் விவசாயி ரவிச்சந்திரன்(54), மனைவி சுப்புரத்தினம்(47) ஆகிய இருவர் மட்டும் விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அதே ஊரில் இருவரும், துக்க காரியத்திற்கு சென்று விட்டு திரும்பிய நிலையில், வீட்டின் பின்புற கதவை தாழிடாமல் உறங்கிக் கொண்டிருந்தனர்.

ரொக்க பணம் எங்கே?:அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் ஆயுதங்களுடன் வீட்டின் பின்புறம் நுழைந்தனர். சத்தம் கேட்டு விழித்த ரவிச்சந்திரன் கத்தி முனையில் சிறை பிடித்து மனைவியின் தாலிக் கொடி உள்ளிட்ட சுமார் 22 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு, ரொக்க பணம் எங்கு உள்ளது என கேட்டுள்ளனர்.

அப்போது, ரவிச்சந்திரன் வீட்டின் முன் பக்க அறையில் உள்ள 2 லட்சம் பணத்தை எடுத்து கொடுத்து விடு என மனைவியிடம் கூறியுள்ளார். மனைவி சுதாரித்துக் கொண்டு வீட்டின் முன் பக்கம் சென்று, திடீரென கூச்சலிட்டுள்ளார். இதனால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அப்போது அவர்களை தடுக்க முயன்ற தினேஷ் என்ற நபரை கத்தியால் வெட்டி விட்டு தப்பியுள்ளனர்.

இதையும் படிங்க:மண்ணுக்குள் 88 சவரன்.. கொள்ளை பணத்தில் 4 கோடிக்கு நூற்பாலை.. தேனி கும்பல் சிக்கியது எப்படி?

இதுகுறித்து, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, மாயனூர் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வார காலமாக தனிப்படை போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்கள் போன்ற விவரங்களை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆறு பேர் கைது:விசாரணையைத் தொடர்ந்து கரூர் மாவட்டம் சேங்கல் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (26), சிவகங்கை மாவட்டம் தேவினிபட்டு சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்னேஸ்வரன் (28), சிவகங்கை மேலரத வீதி தினேஷ் வேலன் (18), சிவகங்கை மாவட்டம் அலுப்பிள்ளை தாங்கி பகுதியைச் சேர்ந்த அசோக் என்கிற முத்துப்பாண்டி (25), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த வெங்கடேஷ் (22), திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஸ்வரன் (28), ஆகிய ஆறு பேரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும், இவர்களிடமிருந்து கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கிருஷ்ணராயபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி குளித்தலை கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆறு பேரும் அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது சிவகங்கை, திருப்பூர் மாவட்ட காவல் இடங்களில் பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதும், வேறொரு வழக்கில் சிறையில் இருந்த இவர்கள் சிறைக்குள் ஒன்றாக கொள்ளை திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விரைவாக தனிப்படை போலீசார் எதிரிகளை கைது செய்திருப்பதற்கு, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், இரவு நேரத்தில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்தாலோ, உதவி கேட்டாலோ பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொண்டு, காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details