சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் அடுத்துள்ள முத்துப்பட்டி பொன்னாகுளத்தில் யானை சின்னத்துடன் கூடிய சூலக்கல் ஒன்றையும், வேறு சில கற்களையும் சிவகங்கை தொல்நடைக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை பொன்னாகுளத்தைச் சேர்ந்த மாதவன், புத்தகக் கடை முருகன் ஆகியோர் கொடுத்த தகவலின் படி, அப்பகுதியில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, செயலர் இரா.நரசிம்மன், கள ஆய்வாளர் கா.சரவணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
சூலக்கல்:இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களிடம் கூறியதாவது, "சிவகங்கை பகுதியில் தொடர்ச்சியாக தொன்மையான எச்சங்களை பாதுகாப்பதும், தொன்மையான எச்சங்களை கண்டுபிடித்து வெளிப்படுத்துவதும், மக்களிடையே அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமான பணிகளை தொடர்ச்சியாக சிவகங்கை தொல்நடைக்குழு செய்து வருகிறது. அந்த பணியின் போது, முத்துப்பட்டி பொன்னாகுளம் புதுக்கண்மாயில் யானை சின்னம் பொறித்த சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எல்லைகளைக் குறிப்பது:பொதுவாக சூலக்கல் கோயிலுக்கு தானமாக வழங்கப்படும் எல்லைகளை குறிப்பதற்காக நடப்படும். சிவன் கோயில் சார்ந்த சொத்தாக இருந்தால் சூலக்கல்லும், பெருமாள் கோயிலுக்கு விடப்பட்ட தேவதானம் இறையிலி போன்றவற்றை குறிப்பதற்காக இருந்தால், திருவாழிச்சின்னம் பொறித்த கல்லும் நடப்படுவது வழக்கமாகும். ஆனால், இங்கு காணப்படுகிற சூலக்கல்லின் கீழே யானை இடம்பெற்றுள்ளது மிகுந்த சிறப்புக்குரியது.
சூலக்கல்லில் பொறிக்கப்பட்ட யானை சின்னம்:பொன்னாகுளம் புதுக்கண்மாய் உள்பகுதியில் இச்சூலக்கல் காணப்படுகிறது. மேலும், இது இரண்டரை அடி உயரமும் ஒரு அடி அகலம் கொண்டுள்ளது. இதில், திரிசூலத்தின் கீழ்பகுதியில் யானை பொறிக்கப்பட்டுள்ளது. யானைப்படையை உடைய வணிகர்கள் 'அத்திகோசத்தார்' எனப்பட்டனர். இவர்கள் பெருவழிகளில் வணிகர்களைப் பாதுகாப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். மன்னர்கள் கோயில்களுக்கு கொடையளிக்கும்போது உடனிருந்து, அக்கொடையை பாதுகாக்கும் பணிகளையும் இவர்கள் செய்துள்ளனர். இவர்களைப் பற்றிய குறிப்பு பூலாங்குறிச்சி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.