திருவாரூர்:திருவாரூர் மாவட்டம் தண்டலை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான வெளி நோயாளிகளும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனை வளாகத்தில், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மகப்பேறு மற்றும் தீவிர சிகிச்சை பெறுவதற்காக தனி கட்டிடம் கட்டப்பட்டு அதனை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தில் பெண்களுக்கான மகப்பேறு சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
நோய்பரவும் அபாயம்:இந்த நிலையில் இந்த கட்டிடத்தை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி நிற்கின்றது. குறிப்பாக மழைக் காலங்களில் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக இந்த நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மருத்துவமனையை சுற்றி கோரைகள் மண்டி காடுகள் போல் காட்சியளிக்கிறது. குறிப்பாக இந்த கட்டிடத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உடன் இருப்பவர்கள், இந்த கட்டிடத்திற்கு வெளியே உள்ள சிறிய தகரக் கொட்டகை மற்றும் திறந்த வெளிப் பகுதிகளில் நாள்தோறும் இரவு பகலாக காத்திருக்கின்றனர்.