ஏற்காட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து சேலம்:ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு மினி பேருந்து வாகனத்தில் சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் இருந்து நேற்று 19 பேர் சுற்றுலா வந்துள்ளனர். பின்னர் ஏற்காடு சுற்றுலா தளத்தில் உள்ள லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட் ஏரி, ரோஜா பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயற்கையை கண்டு ரசித்தனர்.
அதன் பின்னர், சுற்றுலா முடித்து ஏற்காட்டில் இருந்து சென்னை திரும்புவதற்காக இன்று (பிப்.18) மதியம் ஏற்காடு மலைப்பாதையில் தாங்கள் வந்த அதே வாகனத்தில் புறப்பட்டுள்ளனர். அப்போது ஏற்காடு மலையடிவாரத்தின் முதலாவது கொண்டை ஊசி வளைவு அருகே சுற்றுலா வந்த மினி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் சுற்றுலா பேருந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவலறிந்து அந்த பகுதிக்கு வந்த கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் விபத்துக்குள்ளான பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். தொடர்ந்து சுற்றுலா வாகனத்தை மீட்க முயற்சியில் தீயணைப்பு துறை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தால் ஏற்காடு மலையடிவாரத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு சிறை தண்டனை; படகுகளில் கருப்பு கொடி ஏற்றி வேலைநிறுத்தப் போராட்டம்!