சேலம்:சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் பகுதியில் இருந்து சின்னப்பம்பட்டி செல்லும் சாலையில் உள்ளது, பணிக்கனூர் ஓடை பகுதி. இந்நிலையில், இங்குள்ள மேம்பாலம் ஒன்றில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து மேம்பாலத்தின் கீழ் சென்று பார்த்த போது சடலங்கள் அங்கே அழுகிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது தொடர்பாக உடனடியாக ஜலகண்டபுரம் போலீசாருக்கு பொது மக்கள் தகவல் அளித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜலகண்டபுரம் போலீசார், பாலத்தின் அடியில் சென்று பார்த்த போது சுமார் 50 முதல் 60 வயது வரை மதிக்கத்தக்க இரண்டு ஆண்களின் சடலங்கள் மற்றும் ஒரு பெண்ணின் சடலமும் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.
அந்த சடலங்கள் அருகில் ஒரு இருசக்கர வாகனமும் கேட்பாரற்று கிடந்துள்ளது. மேலும் மது பாட்டிலும் தண்ணீர் இருந்த நிலையில் அருகே ரத்தம் உறைந்து காணப்பட்டது. மாந்திரீகம் செய்த அடையாளங்கள் இருந்து உள்ளன. மூவரும் யார்? எந்த ஊர்? என்பது தெரியவில்லை.
இந்த நிலையில், 3 சடலங்களையும் அப்புறப்படுத்திய போலீசார், அவற்றை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மூவரும் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டனரா? என்பது குறித்து ஜலகண்டபுரம் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள மேம்பாலத்தின் அடியில் மூன்று பேரின் உடல்கள் பகுதியில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:நாமக்கல் சிக்கன் ரைஸ் விவகாரம்; தாயும் உயிரிழந்த சோகம்!