திருநெல்வேலி:நெல்லை மாநகர் கேடிசி நகர் பகுதியில் கடந்த 20ஆம் தேதி பட்டப்பகலில் தீபக் ராஜா என்பவர் மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் வாகை குளத்தைச் சேர்ந்த தீபக் ராஜா (30) என்ற இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் சுபாஷ் பண்ணையார் தோட்டத்தில் நடைபெற்ற இரட்டை கொலை, நெல்லை மாவட்டம், தாழையூத்தில் நடைபெற்ற கட்டிட கான்ட்ராக்டர் கண்ணன் கொலை, இது தவிர விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இவர் மீது சாதி மோதல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், தீபக் ராஜா மே 20 ஆம் தேதி நெல்லை பாளையங்கோட்டை அருகே கேடிசி நகரில் உள்ள பிரபல ஹோட்டலில் உணவருந்த சென்றபோது மர்ம கும்பலால் மிக கொடூரமாக விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழ்நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. சம்பவத்தன்று தீபக் ராஜா, தனது காதலிக்காக தனியாக வெளியே வந்தபோது, எதிராளிகளிடம் வசமாக சிக்கிக் கொண்டதாக தெரியவருகிறது. இதைத்தொடர்ந்து, தீபக் ராஜாவின் கொலை குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.