சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, கடந்த 15ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரையானது கேரளா, புதுச்சேரி வழியாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, நேற்று (திங்கட்கிழமை) மாலை சென்னை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்றார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, "தொடர்ந்து 33 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்திலிருந்து ஜோதியை எடுத்து வருகிறார்கள். கர்நாடகாவில் இருந்து கடந்த 15ஆம் தேதி புறப்பட்டு கேரளா, பாண்டிச்சேரி வழியாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தற்போது சென்னை வந்தடைந்திருக்கிறார்கள். தொடர்ந்து, மே 21 ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள்.
நாளைய தினம் தீவிரவாத எதிர்ப்பு உறுதி மொழியை ஏற்க இருக்கிறோம். மாநிலங்களுக்கு இடையே அணையை கட்டுவது மாநிலங்களில் உள்ள ஒருமைப்பாட்டை உறவைச் சீர்குலைக்கும். நீர் எங்கு சென்றடைகிறதோ அவர்களுக்குத்தான் சொந்தம் என்று நீர் ஆதாரத்தைக் கொடுத்து உலகமே எடுத்துரைக்கிறது. கேரளா தங்களை முழுவதுமாக தேசப்பற்றுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை அவர்கள் தரவேண்டும்.