ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பேருந்து நிலையம் அருகே மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி சார்பில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதில் பேசிய அவர், "பாசிச பாஜகவையும், அதிமுகவையும் அகற்றுவதற்கான தேர்தல் இது. தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்தது பாஜக என்றால் அதற்குத் துணை போனது அதிமுக. இந்த தேர்தலில் பாஜக, அதிமுக தனித்தனியே நின்றாலும், உள்ளுறவு வைத்திருக்கிறது எனக் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசுகையில், பிரதமர் மோடி ஜனநாயகத்தைச் சிதைத்தவர், அரசியலமைப்பு சட்டத்தைக் காப்பாற்றத் தவறியவர்.
தேர்தல் பத்திர விவகாரம்: தேர்தல் பத்திர ஊழல் என்ற மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், ஐ.டி, ஈ.டி, அமலாக்கத் துறை சோதனை நடக்கும் போதெல்லாம், மாலையில் பாஜக வங்கிக் கணக்கில் தேர்தல் பத்திரங்களாக ரூ.100 கோடி வரவு வைக்கப்படுவதாகவும், அதன் மூலம் சுமார் ரூ.12,000 கோடி சொத்து சேர்த்துள்ள பாஜக, பணத்தை வைத்து வெற்றி பெற்று விடலாம் என நினைக்கிறது என்றார்.
மோடியின் வாக்குறுதி: ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.15 லட்சம் தருவதாகவும், 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாகப் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் அதற்கு மாறாக, வேலை வாய்ப்பு பறிபோய் கொண்டிருக்கிறது.