சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியினர் இன்று (டிச.31) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட முயன்ற கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்ட களத்திற்கு வந்த உடனேயே கைது செய்யப்பட்டு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட நாதாக-வினர் பேருந்துக்குள் இருந்து கண்டனங்களை தெரிவித்தனர். மேலும், சீமான் கைது செய்யப்படும்போது கோஷங்களை எழுப்பி காவல்துறையினரையும், அரசின் நடவடிக்கைகளையும் கண்டித்தனர்.
அண்ணா பல்கலை. விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழு ஒரு பக்கம் விசாரணையை முடுக்கியுள்ளது. மறுபுறம் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு இந்த வழக்கை விசாரணை செய்யும் என உத்தரவிட்டுள்ளது.
தவெகவினர் கைது
இதற்கிடையே அண்ணா பல்கலை கழக விவகாரத்தில் அரசு துரிதமாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், எதிர் கட்சிகள் இந்த விவகாரத்தில் மாணவிகள் அச்சப்படும் வகையில் நடந்து கொள்வதாகவும் திமுகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அத்துடன், மாணவி வன்கொடுமை விவகாரம் குறித்து தாவெக தலைவர் விஜய் வெளியிட்ட கடிதத்தை கல்லூரி மாணவிகளுக்கு பிரசுரம் செய்ததாக அக்கட்சியினரும், அவர்களை காண வந்த கட்சி பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்தத்தையும் போலீசார் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர். இதற்கு விஜய் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று நாம் தமிழர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை சம்பவம் நாளுக்கு நாள் பூதாகாரமாகி வருகிறது.
இதையும் படிங்க:"சீமான் என்னிடம் மன்னிப்பு கேட்க முயன்றார்"; திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேட்டி..!
வருண்குமார் ஐபிஎஸ் பரபரப்பு பேட்டி
மேலும், திருச்சி எஸ்பியாக இருந்த வருண்குமார் ஐபிஎஸ் சீமான் மீது திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த டிஐஜி வருண்குமார், '' சீமானுக்கு சுயமரியாதை இல்லை. எனக்கு சுயமரியாத இருக்கிறது. எங்கள் குடும்பத்தினர் குறித்து பேசியதால் நான் வழக்கு தொடர்ந்து உள்ளேன். தற்போது சீமான் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளேன். அடுத்த கட்டமாக அவர் மீது சிவில் வழக்கு தொடரவிருக்கிறேன். நான் ஓய்வு பெற்றாலும் இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவேன். சீமான் மைக் முன்பு பேசினால் புலி போல் பேசுவார், பேசியதெல்லாம் பேசிவிட்டு என்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒரு தொழிலதிபர் மூலம் முயற்சி செய்தார். ஆனால், நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தேன் அவர் அதை செய்யவில்லை. இனிமேல் பொதுவெளியில் சீமான் மன்னிப்பு கேட்டாலும், அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்'' என திட்டவட்டமாக கூறினார்.
தமிழக அரசை கண்டித்து பல மேடைகளில் தொடர்ச்சியாக காட்டமான கருத்துக்களை பதிவிட்டு வரும் சீமான் இன்றைய தினம் நடந்த போராட்டத்தில் கைதாகி இருப்பது, அண்ணா பல்கலை சம்பவம் குறித்து பேசுவதை காவல்துறை ஒடுக்கும் முயற்சி என்று சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பத்து மாசம்தான் இருக்கு
கைதாவதற்கு முன்பு சீமான், ''அறவழியில் போராடுபவர்களை எதுக்கு அரெஸ்ட் பண்றீங்க..? எதுக்கு போராடுகிறோம் என்பதை ஊடகத்திடம் சொல்ல விடாமல் கைது செய்றாங்க.. இதில் உண்மையிலேயே ஜனநாயகம் இருக்கிறதா? ஊடக சுதந்திரம், கருத்து சுதந்திரம் இதில் எங்கு உள்ளது..? இந்த கொடுமைகள் ஒழிய அதிகபட்சம் பத்து மாசம்தான் இருக்கு.. நிச்சயம் இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கலைனா பாருங்க'' என்று சீமான் ஆவேசமாக கூறினார்.