சென்னை:நாம் தமிழர் கட்சி நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளைப் பெற்று மாநில கட்சிக்கான அந்தஸ்த்தை பெற்றுள்ளது. அத்துடன், 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகை, திருச்சி ஆகிய 6 தொகுதிகளில் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து வாழ்த்து அறிவிப்பை வெளியிட்டுள்ள அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் '' தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல்'' என கூறியுள்ளார். சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இத்தேர்தலில் வெற்றி எனும் இலக்கை அடையாவிட்டாலும், கணிசமான வாக்குகளைப் பெற்று, மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது.
‘தமிழ்த்தேசியம்’ எனும் உயரிய தத்துவ முழக்கத்தை எம் முன்னோர்களும், மூத்தோர்களும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே தூக்கிச் சுமந்தபோதும், அக்கருத்தியல் முழக்கம் வெகுமக்கள் வடிவம் பெறாமலேயே இருந்தது. அந்தப் போதாமையையும், குறைபாட்டையும் முற்றிலும் போக்கி, தமிழ்த்தேசியத்தை வெகுமக்கள் அரசியலாக்கி, தேர்தலிலே களம் கண்டது நாம் தமிழர் கட்சி.