தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தேர்தலில் வாக்கு கேட்க எங்கள் சின்னத்தை தான் அனைவரும் பயன்படுத்த வேண்டும்" - சீமான் பேச்சு - NTK Mic Symbol Intro

NTK Mic Symbol Intro: “உலக புரட்சியாளர்கள் எல்லோரும் மைக் மூலம்தான் தன் கருத்துகளைக் கொண்டு சென்றுள்ளனர், எனவே மைக் இல்லாமல் யாரும் பிரச்சாரம் செய்ய முடியாது, ஆகையால் எங்களின் சின்னத்தைப் பயன்படுத்திதான் பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

NTK Mic Symbol Intro
NTK Mic Symbol Intro

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 4:22 PM IST

சீமான்

சென்னை: 18வது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்.19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இன்று (மார்ச் 27) சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ள மைக் சின்னத்தை அறிமுகம் செய்து, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் பேசும்போது, "2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. கடந்த காலங்களில் விவசாயி சின்னத்தில் போட்டியிட்டோம். எப்படியாவது அந்த சின்னத்தைப் பெற்றிட வேண்டும் என்று இறுதிவரை போராடினோம். ஆனால், தேர்தல் ஆணையம் வழங்கவில்லை.

சின்னத்தை இழந்தாலும் எண்ணத்தை இழந்து விடக்கூடாது என்று ஒலிவாங்கி (மைக்) சின்னத்தைப் பெற்றுள்ளோம். இதைவிட சிறந்த சின்னம் இல்லை என்று முடிவு செய்துள்ளோம். விவசாயி சின்னத்தையும் நான் கேட்கவில்லை, இந்த சின்னத்தையும் நான் கேட்கவில்லை, தேர்தல் ஆணையம் தான் கொடுத்தது.

என்னை விட எனக்கு எது சரி என்று தேர்தல் ஆணையத்திற்கு தெரிந்துள்ளது. இவ்வளவு நெருக்கடியையும் தாண்டி, களத்தில் நிற்பதற்கு காரணம் நீங்கள் என்னை கைவிட மாட்டீர்கள் என்றுதான். சமூக நீதி, பெண்ணிய உரிமைகள் பேசுவார்கள், அதனை கடைப்பிடிக்கமாட்டார்கள். ஆனால், இந்த எளிய பிள்ளைகள் சரியாகச் செய்கிறோம் என்று நினைத்தால் நீங்கள் எங்களைக் கைவிட்டு விடாதீர்கள். எங்களைக் கைவிட்டு விடாமல் ஆதரிக்க வேண்டும்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று கூறியவர் டிடிவி ஆனால், அவருக்கு எப்படி குக்கர் சின்னம் கிடைத்தது. ஜி.கே.வாசனுக்கு எப்படி சைக்கிள் சின்னம் கிடைத்தது? நான் எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன். அதற்காக சமரசம் செய்ய மாட்டேன். சின்னம் விவசாயி அல்ல, உலகத்தின் அன்னமே விவசாயி தான். நாளை முதல் தான் பரப்புரை தொடங்குகிறோம்.

சுயேச்சையாக நிறுத்தி 40 தொகுதிக்கும் 40 சின்னம் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் முயற்சியாக இருந்தது. இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் ஒப்புக்கொண்டோம். நாம் தமிழர் கட்சி சின்னம் ஒலி வாங்கி. உங்கள் பிள்ளைகள் எழுப்பும் கேள்வி உங்களுக்கான கேள்வி. எதற்காகவும் உண்மையை விட்டுக் கொடுக்காதே, உண்மைக்காக எதையும் விட்டுக்கொடு என்று விவேகானந்தர் கூற்றுப்படி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

மதிமுக, விசிக கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் இன்னும் ஒதுக்கப்படாதது குறித்த கேள்விக்கு, "ஜி.கே.வாசனுக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னொரு மாநிலத்திற்கு சைக்கிள் சின்னம் உள்ளது, அதை எப்படிக் கொடுத்தார்கள். இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால், சின்னம் கொடுப்பதாக மதிமுகவுக்கு சொல்கின்றனர். அப்படி என்றால் திருமாவளவனுக்கு ஏன் கொடுக்கவில்லை?

கோயம்புத்தூரில் மட்டும் எப்படி என் தங்கைக்கு பிரச்சினை வந்தது? என்னை கூட்டணிக்கு கொண்டு வர 10 ஆண்டுகளாக முயற்சி நடக்கிறது. என்னைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். மொத்தத்தையும் விட்டுவிட்டு ஊருக்கு விவசாயம் கூட செல்வேன். ஆனால் கூட்டணி வைக்க மாட்டேன். பாஜகவுக்கு 5 தொகுதியை விட்டுக் கொடுத்தது யார்? அவர்கள் நிற்கும் இடங்களில் திமுக கூட்டணிக்கு விட்டுக் கொடுத்தும், தகுதியான வேட்பாளர்களையும் திமுக நிறுத்தவில்லை. பாஜகவை எதிர்த்து திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை.

40 தொகுதிகள் உள்ள பீகாரில், 7 கட்டமாக தேர்தல், இதைவிடக் குறைவாக இருக்கும் அஸ்ஸாமில் 3 கட்ட தேர்தல். அவர்களுக்குத் தேர்தல் பரப்புரை செய்ய ஏற்றது போல் பல்வேறு கட்டங்களை கட்டமைத்துள்ளனர். புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் போட்டியிடும் எங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த வேண்டியது தானே. தேர்தல் 20 நாட்களில் நடந்து விடும். ஆனால், வாக்கு எண்ண 40 நாட்கள் மேல் ஆகும்.

விவசாயி சின்னம் வாழ்வியலோடு தொடர்புடையது என்று அதனை பெற போராடினோம், உலகப் புரட்சியாளர்கள் எல்லோரும் மைக் மூலம்தான் தன் கருத்துகளைக் கொண்டு சென்றுள்ளனர். எனவே மைக் இல்லாமல் யாரும் பிரச்சாரம் செய்ய முடியாது. எனவே, எங்களின் சின்னத்தைப் பயன்படுத்திதான் பிரச்சாரம் செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:பம்பரம் சின்னத்திற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு.. மதிமுகவின் திட்டம் குறித்து துரை வைகோ கூறியது என்ன?

ABOUT THE AUTHOR

...view details